திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோவிலின் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகண்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 6.45 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகண்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தர்ப்பைப்புல், வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.