வைத்தீஸ்வரன் கோவில் உருவான வரலாறு;
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் இறைவனை மறந்து இறைவழிபாட்டை மறந்து பாவம் எது ! புண்ணியம் எது !என்று பகுத்தறிவிலாது தவறுகள் செய்கின்ற போது பலவிதமான தீய செயல்களும் அதர்மங்களும் அதிகமாக ஏற்படுகின்றன..
அதர்மங்கள் அதிகமாக அதிகமாக அழிவுகளும் அதிகமாக ஏற்படுகின்றது. நோய் நொடிகளில் மக்கள் அதிகமாக அவதிபடும் நிலைமையும் ஏற்படுகின்றது
இந்த அழிவுகள் மட்டுமல்லாது உலகத்தில் இயற்கை பேரழிவுகளும் அதிகமாகி..உலகமே இருள் சூழும் மயமாகி விடுகின்றது .
இதனைத்தான் உலகத்தின் முடிவு காலம் அதாவது அழிவுகாலம் என்கின்றோம் .
அந்த நேரத்தில் அந்த இடத்தில் ஒளிமயமான ஒப்பற்ற இறைவன் ஆதிக்காதியாய் முடிவுக்கு முடிவாய்..
மறைகளும் கடந்து நின்ற இறைவனாகிய சிவபெருமானிடம் சென்றால் இதற்கான வழி கிடைக்கும் என பிரம்மன், விஷ்ணு தேவர்கள் யோசித்தனர் அன்று.
அடுத்தது என்ன ஆயிற்று ! அனைவரும் கைலாய மலை சென்று ஈசனிடம் முறையிடுகின்றனர். ' புல்லிருக்க வேலூர் திருத்தலத்தில் சுயம்புவாய் எமை சென்று பாருங்கள்' என எம்பெருமான் திருவாய் மொழிகின்றான். அதனை ஏற்று பூலோகத்திற்கு வருகின்றனர்.
குளிர்ந்த காற்று எங்கும் வீச ...விந்திய மலை காவேரி கரை அருகே புல்லிருக்க வேலூர் என அழைக்கப்படும் திருத்தலத்தில் ஈசன் சுயம்புவாக அங்கே எழுந்தருளுகின்றார் .
ஆனந்த மகிழ்ச்சி மேவிட பாற்கடலில் பெற்ற அமுதம்தனை கையில் ஏந்தி பிரம்ம ரிஷிகள் , எழுந்தருளிய சுயம்பு லிங்கத்திற்கு தினமும் அபிஷேகம் செய்துவர ....
எம்பெருமான் உடல் தனில் பட்ட அமுதமோ ஆறாய் வழிந்தோடுகின்றது . ஆறாய் வழிந்தோடி தீர்த்த குளமாகி , நோய்கள் விலகும் மருந்தாகி , அதில் மூழ்கி எழுந்தால் உடலும் சிந்தையும் தெளிவு பெறும் என்பதை நமக்கும் உணர்த்தும் விதமாக வைத்தீஸ்வரன் கோவிலில் திருக்குளம் பெயர் பெற்ற புகழோடு இன்றும் விளங்குகிறது.
என்பது திருத்தலத்திற்கு ஒரு சிறப்பு என்றால்..அமிர்தம் வளைந்து ஓடி ஓரிடத்தில் தீர்த்த குளமானது போல, வளைந்து நெளிந்து ஓடும் நம் மனதினை கட்டிப்போட்டு ஆன்மீக கடலில் மூழ்க வைப்பதும் எம்பெருமானினுக்கே உரித்தான கலை என்பதும் வைத்தீஸ்வரன் கோவிலின் தனி சிறப்பு.
சுயம்பு என்றால் என்ன ! சிவபெருமானே தன்னிலை பெற்று எழுந்தருளி மக்களின் மனப்பிணி , உடல் பிணி தீர்ப்பதற்கு மருத்துவராய் வந்து அமர்ந்த திருத்தலம். அம்மையும் பின்தொடர்ந்து மருத்துவச்சியாய் நுழைந்து மனமெகிழ்ச்சி கொண்ட அற்புத திருத்தலம்.
உப்பு, மிளகு , வெல்லம் இம்மூன்றும் தீர்த்த குளத்தினிலே சேர்த்தல் திருத்தலத்தின் சிறப்பு . தோஷம், கெட்ட கனவு, பயம் நம்மை விட்டு விலக கல்உப்பு , விஷம் அனைத்தும் முறிக்கும் திறன் கொண்ட உடல் பிணியை அறவே விலக வேண்டி மிளகு , வெல்லம் நீரில் கரைந்து உருகுதல் போல் , நம் வாழ்க்கை வெல்லமொடு கலந்துருகி இனிது காணவேண்டும் என ஈசனை மிக அழகாக நமக்கு உணர்த்துகின்றான். அப்படிப்பட்ட அற்புதமான திருத்தலமான வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று மனம் உருக வேண்டி வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து நலன்களும் காணுங்கள்.