தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 440 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் புதிதாக நகராட்சி அந்தஸ்து பெற்ற சுரண்டை ஆகிய 6 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தென்காசியில் 33 வார்டுகளும், கடையநல்லூரில் 33 வார்டுகளும், புளியங்குடியில் 33 வார்டுகளும், சங்கரன்கோவிலில் 30 வார்டுகளும், செங்கோட்டையில் 24 வார்டுகளும், சுரண்டையில் 27 வார்டுகளும் உள்ளன. மொத்தமாக இந்த நகராட்சிகளில் இருந்து 180 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது போல இந்த மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பகுதிகளிலும் தேர்தல் மூலம் 260 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரும், தேர்தல் அலுவலருமான கோபால சுந்தரராஜ் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.