தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை மாசி திருவிழா கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் 12-ம் திருவிழா மண்டபத்தில் உள்ள சிதம்பர தாண்டவ விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அர்ச்சகர் கொடிப்பட்டதுடன் அமர்ந்திருக்க 8 ரத வீதிகளிலும் உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.