கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த கோவிலில் உள்ள இயற்கை மூலிகையால் வரையப்பட்ட சுவரோவியங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றும் வரும் இந்த சுவரோவியங்கள் புதுப்பிக்கும் பணி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சுவரோவியம் புதுப்பிக்கும் பணிகள் கடந்த வாரம் மீண்டும் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோவிலில் பணியாற்றும் கேரளாவை சேர்ந்த ஓவியரிடம் கேட்ட போது, கோவில் கருவறையைச் சுற்றியுள்ள சிதலமடைந்த சுவரோவியங்கள் அனைத்தும் அதன் பழமை மாறாமல் இயற்கை வர்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது, இந்த பணிகள் முடிவடைய இன்னும் மூன்று மாதங்கள் வரை ஆகும் என்று கூறினார்.