செய்திக்குறிப்புகள்:
தூத்துக்குடி மாவட்டத்துக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள்.
மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை மக்கள் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செந்தில்ராஜ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் திரு.செந்தில்ராஜ் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இங்குபேட்டர் வசதிகளுடன் கூடிய 2 ஆம்புலன்ஸ், 3 வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் 17 அடிப்படை வசதிகளுடைய ஆம்புலன்ஸ் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் உயிர் காக்கும் சேவைகள் அளிக்கப்படுகிறது. தற்போது மேலும் புதிதாக 3 ஆம்புலன்ஸ்கள் வரப்பெற்றுள்ளதால் பொதுமக்கள் தடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவைகளை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று கூறினார்.