கண்ணாடி வளையல்கள் கலகலக்க 'அம்பாள் ஊஞ்சல் உற்சவம்' கண்முன்னே காண கண் கோடி வேண்டும்' எனும் ஆனந்தமாய் கொண்டாடும் நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை ஒட்டி நேற்று காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த 22 ஆம் தேதி திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. நேற்று காந்திமதி அம்மனுக்கு கர்ப்பிணி பெண்கள் கொண்டாடும் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கான வைபோக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதிகாலையே காந்திமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிகழ்த்தப்பட்டு பக்தர்கள் அம்மனை பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.
மதியம் 12 மணிக்கு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்ற வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அதை அடுத்து அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருள, வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்கள் ஆர்வத்தோடு அம்பாளுக்கு வளையல்கள் அளிக்க காந்திமதி அம்மன் மிக அழகாக கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தது பக்தர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியின் முடிவில் தீபாராதனை காட்டப்பட்டது.
காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் இரவு 8 மணிக்கு வீதி உலா வர... பக்தர்கள் அனைவரும் அம்மனை பக்தி பரவசத்தோடு தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்காகவே அதிக நேரம் செலவிடுங்கள். அதில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். உவகை அடைவீர்கள். உள்ளத்தில் உறங்கிய கவலைகள் நீங்கப் பெற்று புதிய வரங்கள் பெறப்பட்டு, வாழ்வில் அனைத்து செல்வ வளங்கள் பெற்று, வாழ்வினில் நிறைவு காணுங்கள்.