செய்தி சுருக்கம்:
- நெல்லை மாவட்டம் ஜூலை 28 ஆம் தேதி வியாழக்கிழமை ஆடி அமாவாசை திருவிழா சொரிமுத்து அய்யனார் கோவிலில் நடைபெற உள்ளது.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் மணிமுத்தாறு, பாபநாசம் அருவிகளுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பை காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெற இருக்கிறது. நெல்லை மாவட்டம் சுற்றியுள்ள தென்காசி, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்டம் நிர்வாகம் மற்றும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருவிழாவை ஒட்டி வரும் பக்தர்கள் மணிமுத்தாறு பாபநாசம் அருவிகளுக்கு செல்ல கூடாது என அரசு தடை விதித்துள்ளது.
தனியார் வாகனங்களில் வருவதை தவிர்க்க வேண்டும். திருவிழாவிற்கு பக்தர்கள் தனியார் வாகனங்களில் வந்தால் அம்பை அகஸ்தியர் பட்டியில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து அரசு பஸ்களில் செல்லலாம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அரசு பல கட்டுப்பாட்டுகளை விதித்து இருக்கிறது.
போலீசார் வனத்துறையினர், பள்ளி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருகிற 30-ஆம் தேதி சனிக்கிழமை வரை களக்காடு, முண்டத்துறை புலிகள் காப்பகம் செல்லவும் தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி மாஞ்சோலை குதிரைவெட்டியில் உள்ள ஓய்வு இல்லம், பாபநாசம் அகஸ்தியர் மணிமுத்தாறு அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.