கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று தை மாத நிறை புத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் தைப்பூச தினத்தன்று நெற்பயிர் விளைச்சல் செழித்தோங்கிடவும், அறுவடை பெருகி நாட்டு மக்கள் சிறப்படைய வேண்டியும் நிறை புத்தரிசி பூஜை இங்கு நடத்தப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பகவதி அம்மனுக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம், அலங்கார தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து காலை 5.30 - 6.30 மணிக்குள் கோவிலுக்கு சொந்தமான வயல்களில் இருந்து அறுத்தெடுத்து கொண்டு வரப்பட்ட நெற்கதிர்களை கொண்டு நிறை புத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.