செய்திக்குறிப்புகள்:
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை.
கன்னியாகுமரி கடலில் உற்சாக குளியல்.
உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கேரளம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கன்னியாகுமரிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக உள்ள நிலையில் விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் நேற்று கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்தும், கடலில் நீராடியும் மகிழ்ந்தனர்.
பின்னர் கடற்கரையில் உள்ள காந்தி மண்டபம், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், பகவதி அம்மன் கோவில், திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி ஆகியவற்றையும் பார்வையிட்டனர். நேற்று சுற்றுலா பயணிகள் வருகையால் கன்னியாகுமரி முழுவதும் மக்கள் கூட்டமும், கடைகளில் வியாபாரம் களைகட்டியது.