திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் வருடம்தோறும் தைப்பூச திருவிழாவின் பன்னிரெண்டாம் நாளில் சுவாமி சன்னதி வீதியில் உள்ள வெளி தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா இன்று நடைபெற வேண்டிய நிலையில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை காரணம் காட்டி தெப்பத்திருவிழா ரத்து செய்யப்படுவதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பேரவையினர் மற்றும் இந்து முன்னணியினர் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், இந்து முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடமும் தெப்பத்திருவிழாவுக்கு அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது தெப்பத்திருவிழா நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் வெளித்தெப்பம் முழுவதும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு, தெப்பத்திருவிழாவுக்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இன்று இரவில் வழக்கம் போல தெப்பத்திருவிழா நடைபெறும் என்றும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.