ஆறுபடைவீடுகளுள் இரண்டாம் படைவீடு என சிறப்பிக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழாவுக்காக பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் மற்றும் வெளியூரில் இருந்து தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் கூட்டத்தால் கடற்கரை மற்றும் கோவில் வளாகம் முழுவதும் நிரம்பி வழிந்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தென்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஐந்து நாட்களுக்கு பின்னர் நேற்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ஏராளமான பாத யாத்திரை பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்கபிரதட்சணம் செய்தும் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.