பழனி மலையில் முருகபெருமான் அமர்ந்த வரலாறு
ஆழ்ந்த பாசம் அனுதினமும் உண்டு. அன்பு வைப்பதில் பஞ்சமில்லாது கொஞ்சி மகிழ்கையில் அண்ணனுக்கு நிகர் கிடையாது அவனே கணபதி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தம்பி முருகன் பால் அளவுகடந்த அன்பின் பொருட்டு அடிக்கடி சீண்டிவிட்டு கோபம் வரும் தம்பியை கண்டு.. அளவிலா ஆனந்தம் கொள்வதுண்டு என்பது அடிக்கடி நடக்கும் சமாசாரம்தான் என்றாலும் அன்று நடந்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கின்றது .
நாரதர் யாரிடம் தன் விளையாட்டை ஆரம்பிக்கலாம் என்று அங்குமிங்கும் தேடிக்கொண்டிருக்க...அன்று மாட்டிக்கொண்டார் கணபதி. இருவரும் சேர்ந்ததால் உருவானது நாடகம் ஒன்று.
மாம்பழம் ,சுவையான பழம், சுவையுண்டு மகிழ்வோர்க்கு ஞானத்தை அளிக்கும் பழம்- என நாரதர் சொல்கேட்டு ....ஆசையோடு பறிக்கின்றான் எம்பெருமான் முருகன் அவன். விடுவாரா நாரதர் .கைக்கெட்டிய கனியோ! சுவை பெற கடின உழைப்பு முயற்சி இருந்தால் மட்டுமே அப்பழம் கிட்டும் .வெற்றியும் கிடைக்கும் என தத்துவம் உரைக்க...
ஆவலோடு தந்தையின் முகம் நோக்குகின்றான் தமையன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உதித்து கார்த்திகை பெண்களிடம் வளர்ந்த ஞானகுழந்தையோ ! ஞான பழத்தின் மீது ஆசை கொண்டான் .
'மனிதனுக்கு ஆறு அறிவு என்பது உலகத்தை அறியும் அறிவும் சேர்த்து' என்பதை அனைவரும் அறிதல் வேண்டும்... என்பதை உலகத்திற்கு உணர்த்துவதற்காக சிவன் வைத்தார் போட்டி ஒன்று.
உலகத்தை சுற்றி வருபவருக்கே ஞானப்பழம் என்றுரைக்க வெற்றிபெற்றான் உலகத்திற்கு நாயகனாய் விளங்கும் விநாயகர். 'அம்மையப்பனே நாம் காணும் உலகம் அவர்களை வசம் கொண்டால் அனைத்து வெற்றியும் ஆசியும் முடிவில் நமக்கே' என எடுத்துரைத்தார். அம்மையப்பனை சுற்றி வந்து பழத்தையும் பெற்றுக்கொண்டார். வெற்றியும் கண்டார்.
முருகனோ கோபம் கொண்டான். கண் அசைந்தால் போதும் , உலகே அவன் வசம் என்றிருக்க.... உழைத்துதான் வெற்றி பரிசை தட்டுவேன் வெற்றிவாகை சூடுவேன் என மயிலேறி காட்சி தந்த எம்பெருமான் முருகன் அவன்...
முடிவில் ஞானப்பழம் கிடைக்கவில்லையே என கோபமுற்றான். உற்றார் உறவினர் சுற்றத்தார் இனி வேண்டேன், என கோபம் கொண்டு ....ஒன்றும் அறியாத குழந்தை வடிவத்திலேயே , மலைதனின் உச்சியில் சென்று குழந்தை வடிவத்தில் நின்ற கோலத்தில் ஆண்டியாய் காட்சி தருகின்றான் அழகன் அவன் .
'பழம் நீயப்பா, உனக்கு ஒரு பழம் தேவையா ! வந்து தாய் தந்தையாரோடு காட்சி தருவாய்' என அவ்வையோ சமரசம் செய்து வைக்க... பெரியவரின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நியதியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனும் நியதி பொருட்டு கோபத்தை தணித்துக் கொண்டு அம்மையப்பனோடு காட்சி தருகின்றார் முருகப்பெருமான்.
பழத்திற்காக கோபம் கொண்டு மலையின் மீது நின்றதால் பழம் நீ எனும் சொல் பழனி என புகழ்பெற்ற தலமாக உருவாகி இன்றும் என்றும் தெய்வீக திருத்தலமாய் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக அமைந்தது.
முருகப்பெருமானின் திருப்புகழை என்றும் பறை சாற்றி அளவிலா பக்தர்களின் வருகையோடு பழனி எனும் மலை கண்குளிர காட்சி தருகின்ற அழகை கண்டு ஆண்டிக் கோலத்தில் முருகன் தரிசனத்தை பெற்று மனமுருக வேண்டுவோர்க்கு நினைத்த காரியத்தை ஜெயமாக்கி இனிதே நடத்தி வைப்பான் எம்பெருமான் முருகப்பெருமான்.
ஓம் முருகா போற்றி
Image source: dheivegam