சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும் காலம் அமாவாசை. சூரியனை பிதுர்காரகன் என்றும் , சந்திரனை மாதுர்காரகன் என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் கூறுகின்றனர். இந்த இரண்டு ஒரே நேர்கோட்டில் அமையும் தினமே அமாவாசை என்கின்றோம்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடும் தினம்தான் அமாவாசை . பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்துவிட்டால் குடும்பத்தில் பல குழப்பங்களும் சுப தடைகளும் இருந்து கொண்டே இருக்கும். இதற்கு பரிகாரம் தென்புலத்தார் அதாவது நம்முடைய முன்னோர்கள் மகிழ்ந்து ஆசி தரவேண்டும் அதற்கான சிறப்பான வழிபாடு தான் அமாவாசை
முன்னோர்களுக்கு அமாவாசை தோறும் படைக்க இயலாதவர்கள் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் கண்டிப்பாக முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும் .
ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் அனைவரும் பூமியில் வருகின்றனர் தை அமாவாசை அன்று பித்ருக்கள் நம் முன்னோர்கள் பித்ருலோகத்திற்கு திரும்பி செல்கின்றனர்.
அவர்கள் மகிழ்ச்சி அடைந்து வழி அனுப்பும் விதமாக நாம் அமாவாசை வழிபாடுகளை முறைப்படி செய்து முன்னோர்களை திருப்தி படுத்த வேண்டும் .
அமாவாசை விரதம் என்பது யார் இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்;
தாய் தந்தை இல்லாத ஆண்கள் இந்த விரதம் இருத்தல் வேண்டும். கணவர் இல்லாத பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். ஒரு ஆணுக்கு தாய் இல்லை என்றாலும் தந்தை இல்லை என்றாலும் இருவரும் இல்லை என்றாலும் அவர்கள் கண்டிப்பாக அமாவாசை விரதத்தை கடைபிடிக்க வேண்டும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
உபவாசம் இருத்தல், எள்ளும் தண்ணீரும் இறைத்தல், கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றுதல் ,உணவு தானம் செய்தல் , பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தல், காகத்திற்கு அன்னம் வைத்தல், மற்றும் பைரவ வாகனம் நாய் பிஸ்கட் அல்லது உணவு வைத்தல் இவை அனைத்தும் நாம் அமாவாசை தினத்தன்று கண்டிப்பாக செய்ய வேண்டும்.
இந்த முறைகளை கடைப்பிடித்து, நம்முடைய முன்னோர்கள் ஆசி பெறுவது மட்டுமின்றி குலதெய்வத்தின் ஆசியும் நாம் பெற்று வாழ்வில் அனைத்து துன்பங்கள் மறைந்து மகிழ்ச்சியான வளமான வாழ்க்கை காண்போம்.
Image source: dinakaran.com