தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டாரத்தில் பயிரிடப்படும் கொத்தமல்லி நாட்டு ரகங்களை சேர்ந்தவை என்பதால் அதிக நறுமணம் மற்றும் சுவையுடன் இருக்கும். எனவே இந்த பகுதியில் விளையும் கொத்தமல்லிக்கு என தனி மவுசு உண்டு. சுத்த கரிசல் மண்ணில் மட்டுமே விளையக்கூடிய கொத்தமல்லி செடிகள் வளர அதிக மழை தேவை இல்லாவிட்டாலும், ஒரளவு ஈரப்பதமாவது நிலத்தில் இருக்க வேண்டும். எனவே கரிசல் மண் நிறைந்துள்ள கோவில்பட்டி பகுதியில் உள்ள புதூர், விளாத்திகுளம் உட்பட பல பகுதிகளில் நடப்பு ஆண்டில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கொத்தமல்லி பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொத்தமல்லி செடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசு தோட்டக் கலைத் துறை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.