தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. முக்கியமாக இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதனால் குமரி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளதால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டு, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் ஆட்டோக்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் வழக்கம் போல இயங்கத் தொடங்கியதால் குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.