- மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.
- மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த கோவில் கோபுரம்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நேற்று நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருக்கோவில் ராஜ கோபுரம், முன் மண்டபம், பிரகாரங்கள் ஆகியவற்றில் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதனால் தூரத்தில் இருந்து பார்க்கும் போதே நெல்லையப்பர் கோவில் ராஜ கோபுரம் இருட்டிலும் வண்ணமயமாக ஜொலித்தது. மேலும் திருக்கோவில் பிரகாரங்கள் மற்றும் நுழைவு வாயிலில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நடராஜர் உருவம் மற்றும் விளக்குகள், சிவலிங்க உருவம் ஆகியவை பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. பல பக்தர்கள் இந்த மின்விளக்கு அலங்காரங்களை தங்கள் கைப்பேசியில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
திருக்கோயிலுக்கு வருகை தந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மின் விளக்கு அலங்காரங்களை கண்டு ரசித்தபடியே சிவராத்திரியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்கள்.