செய்தி சுருக்கம்:
- திருநெல்வேலி மாவட்டத்தில் மழை இல்லாததால் வாழை நார் உற்பத்தி தீவிரம்
- வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாழைநார் உற்பத்தி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தகவல்
வாழையடி வாழை என்று நம்முடைய குலத்திற்கு பெருமை சேர்க்கும் வாழை என்பது விவசாயிகளுக்கு மிகவும் பிடித்தமான சாகுபடி என்ற பெயர் பெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணப் பயிர்களில் ஒன்றாகவும் வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. வழக்கத்தைவிட இந்த வருடம் சாரல் மழை இல்லாததால் வாழை மர சாகுபடிக்கு ஏற்றதாகவும் விவசாயிகளுக்கு அமைந்துள்ளது. வெயிலின் தாக்கம்அதிகரித்துள்ளதால் நார் உற்பத்தியின் திறனும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அருகே அமைந்துள்ள பழவூர், சுத்தமல்லி சுற்றுப்பகுதியான தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதிகளில் வாழை மரங்கள் பயிரிடப்பட்டிருந்தன. வாழையில் பல ரகங்களான ரதகதலி, ரோபஸ்டா, செவ்வாழை, ஏத்தன், மட்டி போன்றவை அதிகம் பயிரிடப்பட்டிருந்தன.
இப்பொழுது வாழைகளில் தார்கள் அறுவடை முடிவடைந்த நிலையில், அங்கு வாழை நார் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது.
இது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாவது:
ஜூலை மாதத்தில் எப்பொழுதும் தாமிரபரணி கரையோர பகுதியில் வாழைத்தார் அறுவடை முடிவடைந்துவிடும். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மேகமூட்டமும், சாரல் மழையும் தொடர்ந்து இருப்பதால் வாழை உற்பத்தி பாதிக்கும். ஆனால் இந்த வருடம் சாரல் மழை இல்லாது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழைநார் உற்பத்தியும் இதனால் அதிகரிக்கும் என்று கூறினர்.
தொடர்ந்து இரு நாட்கள் வாழைநார்கள் காய வைக்கப்படும். காய்ந்த பிறகு அவையாவும் சேகரிக்கப்பட்டு பைகள், காலனி, புடவைகள் என பலவிதமான மதிப்புள்ள பொருட்களாக தயாரிக்கப்படுகின்றன. இதனால் எங்களுக்கு வாழை உற்பத்தி லாபகரமான தொழிலாகவும் மாறி உள்ளது என்று மேலும் மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.
தாய் மண்ணை தெய்வமாய் போற்றி வணங்கும் விவசாயிகளின் மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்து நீடிக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுதலாகவும் அமையட்டும்.