செய்திக்குறிப்புகள்:
- தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு அவர்கள் திருநெல்வேலி வருகை.
- போதைப் பொருட்கள் விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரு. சைலேந்திரபாபு அவர்கள் நேற்று திருநெல்வேலிக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி திரு. சைலேந்திரபாபு அவர்கள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புலன் விசாரணை மற்றும் நீதிமன்ற விசாரணை வழக்குகளை ஆய்வு செய்து அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையாளர் திரு. துரைகுமார், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திரு. பிரவேஷ் குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் திரு. சரவணன் (திருநெல்வேலி), திரு. கிருஷ்ணராஜ் (தென்காசி), திரு. ஜெயக்குமார் (தூத்துக்குடி), திரு.பத்ரி நாராயணன் (கன்னியாகுமரி) உட்பட பல காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Image Source: dailythanthi