லலிதா பரமேஸ்வரியின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியாய் திகழ்பவள், கருணைக்கடல் அவள் கலை செல்வங்கள் அனைத்தும் கொடுக்கும் மாமகள் என்றெல்லாம் என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவி சப்த மாதர்களில் தலைமை ஆனவள்.
தாருகாசுரனோடு போர் புரிந்த போது பரமேஸ்வரிக்கு துணை நின்றவள் வாராஹி அம்மன். சும்பாசுரனோடு சண்டிகா போரிலும் லலிதா பரமேஸ்வரிக்கு சேனா நாயகியாய் நின்று உதவியவள் எனும் பெருமைக்கு உரியவளே நினைத்த காரியத்தை ஜெயமாக்கும் வாராஹி அம்மன்.
சிங்கத்தை வாகனமாய் கொண்டு அண்ட சராசரங்களை காப்பவள் லலிதா பரமேஸ்வரி என்றால், அந்த அம்பிகையின் ரத, கஜ ,துரக, பதாதி எனும் நால்வகை படைகளுக்கும் தலைவி என்னும் பொறுப்பில் தண்டினீ ஆக இவள் பக்தர்களால் போற்றப்படுபவள் ஆகிறாள்.
ஆதிவாராஹி, உன்மத்த பைரவி ,பஞ்சமி, அஸ்வாரூடா வாராஹி,ஸ்வப்ன வாராஹி பல பெயர்களில் திகழ்பவள். அபிராமி பட்டரின் 'பஞ்சமி பைரவி பாசாங்குசை' எனத் தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலில் இவளை பற்றி போற்றிப் பாடுகிறார்.
இருகிய மனதை மென்மையாக்கி தெளிவிலா புத்தியை மிருதுவாக்கி அன்பு வளரவும் புத்தியில் இறை உணர்வு வளரவும் வழி செய்வாள்
இவளுக்கு மிகவும் பிடித்தமான நிவேதனங்கள் பூமிக்கு அடியில் விளையும் சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றில் பூண்டும் வெங்காயமும் சேர்ந்த பலகாரம் .
அது தவிர சர்க்கரைப் பொங்கல், வெல்லம் சேர்த்த பாயாசம், மிளகு சீரகம் கலந்திட்ட தோசை , தோல் எடுக்காத முழு உளுந்தில் செய்த வடை, எல்லா பருப்புகளும் சேர்த்து ஆமைவடை, எருமைப்பால், எருமை தயிர் , எள்ளுருண்டை, தயிர் சாதம், மொச்சை, சுண்டல் மற்றும் தேன் என பொருட்களை பூஜையில் வைத்து படைத்தால் அகம் மகிழ்ந்து அணைத்து வரங்களும் அவள் தருவாள்.
வெண் தாமரையும் செந்தாமரையும அவளுக்குரிய மலர்களாகும் . இரவுநேர பூஜை எனும் அம்மனுக்குரிய ஐதீக பூஜையில் அந்த மலர்களை நாம் சாற்றி, மனம் உருகி வழிபட்டால் பதினாறு செல்வங்களும் பெற்று துன்பங்கள் யாவும் விலகி, வாழ்வில் அனைத்து சிறப்புகளும் பெற்று வாழலாம் . வாராஹி அம்மனை வழிபடுங்கள் வாழ்க்கையில் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கப்பெற்று வளம் காணுங்கள்.