- குற்றாலம் பேரருவி, ஐந்தருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்.
- சுற்றுலா பயணிகள் வருகையால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது. இங்குள்ள பழைய குற்றாலம், பேரருவி, பழத்தோட்ட அருவி, புலி அருவி, செண்பகாதேவி அருவி, ஐந்தருவி, தேனருவி, சிற்றருவி ஆகிய இடங்களில் குளித்து மகிழ வருடம் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள். மே - ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டும் நேரத்தில் சுற்றுலா பயணிகளாலும், கார்த்திகை மாதம் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் கூட்டத்தாலும் நிரம்பி வழியும் குற்றாலத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் முதல் குற்றாலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகையால் குற்றாலம் மீண்டும் பொலிவு பெற்று வருகிறது. நேற்று குற்றாலத்தில் உள்ள பேரருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் குறைந்த அளவு தண்ணீர் விழுந்த போதிலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்ததை காண முடிந்தது. இதனால் இப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.