திருநெல்வேலி மாநகரில் அமையப்பெற்றுள்ள சுவாமி ஸ்ரீ நெல்லையப்பர் - ஸ்ரீ காந்திமதி அம்மை திருக்கோயிலில் நடைபெறும் ஆனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவில் நடைபெறும் ஆனித் தேரோட்டம் உலக புகழ் பெற்றதாகும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமை பெற்ற திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் தேர் ஓடும் வீதிகள் அனைத்தும் மக்கள் கூட்டமாகக் கூடி நின்று தேரினை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை கண்டு களிப்பார்கள். சுமார் 500 வருடங்களுக்கு மேலாக தடைகள் ஏதும் இல்லாமல் வருடந்தோறும் தொடர்ந்து ஓடிய ஒரே தேர் என்ற பெருமை பெற்ற இந்தத் திருநெல்வேலி தேர், முதல் முறையாக சென்ற ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக திருக்கோயில் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்ட நிலையில், தேரோட்டம் அன்று ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டின் தேரோட்டத்திற்கு உரிய நாள் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் கொரோனா நோய் தொற்று காரணமாக திருக்கோயில் விழாக்கள் நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளதால் இவ்வருட ஆனித் தேரோட்டம் நடைபெறுமா என்ற கேள்விக்குறி திருநெல்வேலி வாழ் மக்களிடையே எழுந்துள்ளது. விரைவில் நோய் பரவல் கட்டுக்குள் வந்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்று திருநெல்வேலி மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.