பொதுமக்களின் பயன்பாட்டைக் கருதி சென்னை - தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலி வரை அந்தியோதயா ரயில் சேவை துவக்கப்பட்டது. மற்ற ரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்ய வேண்டிய நிலையில், அந்தியோதயா ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்ய வேண்டியதில்லை என்பதால் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட அந்தியோதயா ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
பின்னர் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சென்னை (தாம்பரம்) - நாகர்கோவில் வழித்தடத்தில், திருநெல்வேலி வழியாக இயக்கப்பட்ட அந்தியோதயா ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நோய்த்தொற்று குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பேருந்து சேவைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், அந்தியோதயா ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரயில், மாலை 5.05 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்து இங்கிருந்து புறப்பட்டு நாளை காலை தாம்பரம் ரயில் நிலையம் சென்று அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.