தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தளர்வுகளால் தொற்று குறைந்த மாவட்டங்களில் பொது போக்குவரத்து சேவைகளும் தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாநகரில் பொது மக்கள் சகஜமாக வெளியே உலாவ தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகர பகுதிகளில் பரவி வந்த கொரோனா பெருந்தொற்று மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் புதிய வகை டெல்டா பிளஸ் நோய் தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளால் தேவையில்லாமல் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும், குறிப்பாக வணிக நிறுவனங்களுக்கும், கடைகளுக்கும் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், காய்ச்சல், சளி, இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் இருந்தால் வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.