கொரோனா பெருந்தொற்று குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. வரும் திங்கள்கிழமை (05/07/2021) முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாநிலங்களுக்குள் நடைமுறையில் உள்ள ஈ-பாஸ், ஈ-பதிவு முறை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், பேக்கரி கடைகள் மாற்று தேநீர் கடைகளில் 50% சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்து சேவை தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள் - யோகா பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது.
திருமண விழாக்களில் 50 நபர்களும், துக்க நிகழ்வுகளில் 20 நபர்களும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளை இரவு 9.00 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. அனைத்து நகைக்கடைகள், துணிக்கடைகள் 50% வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அருங்காட்சியகங்கள், தொல்லியல்துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. பொழுதுப்போக்கு பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் 50% நபர்களை கொண்டு செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. விடுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வாடிக்கையாளர்கள் தங்க அனுமதியளிக்கப்படுகிறது.
பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி சமூக இடைவெளி பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் பொது இடங்களில் நடமாட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.