திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இந்திய - ரஷ்யா கூட்டு ஒப்பந்தத்துடன் 1000 மெகாவாட் உற்பத்தி திறனை கொண்ட 6 அணு உலைகளை அமைப்பது இந்திய அணு சக்தித்துறையின் திட்டம் ஆகும். இதில் முதல் கட்டமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பின்னர் இரண்டாம் கட்டமாக 3 மற்றும் 4 வது அணு உலைகள் கட்டும் பணியும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மூன்றாம் கட்டமாக 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி இன்று முதல் துவங்க உள்ளது.
இதற்கான கட்டுமான பணிகளை இன்று காணொளி காட்சி மூலம் இந்திய அணு சக்தித்துறையின் செயலாளர் மற்றும் அணுசக்தி வாரியத்தின் தலைவருமான திரு.கே.என்.வியாஸ் அவர்கள் மும்பையில் இருந்தபடியே துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அணு உலைகளுக்கான திட்ட இயக்குனர் திரு.சுரேஷ், கூடங்குளம் அணு மின்நிலைய மூத்த விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் என முக்கிய அதிகாரிகள் மட்டும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொள்கின்றனர்.