திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இங்கு சுமார் 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன ரத்த பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன கருவியின் செயல்பாட்டை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் துவக்கி வைத்தார்.
பொதுவாக நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல கோளாறுகளை கண்டறிய ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். நடைமுறையில் உள்ள ரத்த பரிசோதனை முறைப்படி முடிவுகளை தெரிந்துகொள்ள குறைந்தது இரண்டு மணி நேரம் வரை ஆகலாம். ஆனால் இந்த நவீன கருவி மூலம் ஒரு நிமிடத்திலேயே பரிசோதனை முடிவுகளை நாம் பெற்றுவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நோயாளிகளுக்கு தாமதமின்றி தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.