திருநெல்வேலி மாநகரில் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில், ஆங்காங்கே பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதும், அதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை கைப்பற்றி அபராதம் விதிப்பது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, மாநகரில் உள்ள பலசரக்கு கடைகள் மற்றும் சுவீட் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களைக் கட்டி கொடுக்க பனையோலைகளில் செய்யப்பட்ட பெட்டிகள் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. ஒரு கிலோ, இரண்டு கிலோ, அரை கிலோ மற்றும் தேவையான அளவுகளில் இந்தப் பெட்டிகள் மொத்தமாக உடன்குடி பகுதியில் உள்ள பனையோலை பொருட்கள் தயார் செய்யும் தொழிலாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர பனையோலைகளால் செய்யப்பட்ட விசிறிகள், பாய்கள், கூடைகள், சொளவுகள் ஆகிய பொருட்களும் மாநகரில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. தற்போது மக்களிடமும் பாரம்பரிய பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு உண்டாகி வரும் நிலையில், பனையோலை பொருட்களின் விற்பனையை அதிகரிக்க துவங்கி உள்ளது. இதன் மூலம் பனை மரங்களை சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டு வருகிறது.