உலக குருதிக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி ஆட்சித்தலைவர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் ரத்த தானம் வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
ரத்த தானம் வழங்கிய பின்னர் ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள், உலக குருதிக்கொடையாளர் தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் அதிகமாக ரத்ததானம் செய்யும் ரத்த கொடையாளர் கவுரவிக்கப்படுவார்கள். உலக சுகாதார நிறுவனம் வழங்கிய இந்த வருடத்தின் மேற்கோள் "உதிரத்தை கொடுத்து உலகத்தை துடிப்புடன் வைத்திருப்போம்" என்பதாகும். பொதுமக்கள் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ரத்த தானம் வழங்க முன்வர வேண்டும். பொதுமக்கள் மத்தியில் ரத்த தானம் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் குமார், சசிகலா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் மணிமாலா, ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் ரவி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.