தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் சீராக செயல்படாத நிலையில்
இணையவழியில் தான் அனைவருக்கும் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. கடந்த 2021 மார்ச் மாதம் பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதி பொதுத்தேர்வும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வும் ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
தற்போது இந்த கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வும் நடத்தப்படாததால், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பதினோராம் வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நேற்று முதல் பதினோராம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.
மாணவர்களின் கல்வி பயிலும் திறன், ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள், ஆன்லைன் கல்வியில் பங்கேற்றது உள்ளிட்ட பல்வேறு நிலைகளை கருத்தில் கொண்டு பதினோராம் வகுப்பில் உள்ள வெவ்வேறு பிரிவுகளில் மாணவர்களுக்கு இடம் ஒதுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.