தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி கடையத்தில் 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை, 84 அடி கொள்ளளவு கொண்ட இராமநதி அணை, செங்கோட்டை அருகே மேக்கரையில் 132.22 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார்கோவில் அணை, கடையநல்லூர் அருகே 72.18 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை என மொத்தம் நான்கு அணைகள் உள்ளன. இந்த நான்கு அணைகளும் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் இருப்பு அதிக அளவில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை , ராமநதி அணை, அடவிநயினார் கோவில் அணை, கருப்பா நதி அணை ஆகிய நான்கு அணைகளில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடனாநதி மற்றும் ராமநதி அணைகளை நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் ஆட்சியர் சமீரன் திறந்து வைத்தனர். கருப்பாநதி மற்றும் அடவிநயினார் கோவில் அணைகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் திறந்து வைத்தனர்.
கடனாநதி அணையில் இருந்து வினாடிக்கு 125 கன அடியும், இராமநதி அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும், கருப்பாநதி அணையில் இருந்து வினாடிக்கு 25 கன அடியும், அடவிநயினார்கோவில் அணையில் இருந்து வினாடிக்கு 60 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 140 நாட்களுக்கு திறக்கப்படும் இந்த தண்ணீர் மூலம் மாவட்டத்தில் நேரடியாக 8225.46 ஏக்கர் பாசன பரப்பளவு கொண்ட விளை நிலங்கள் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.