திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்றும் கோடை மழை பரவலாக பெய்தது. அக்னி நட்சத்திர காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் புழுக்கத்தில் தவித்து வந்த நிலையில், தற்போது ஓரிரு நாட்களாக திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 3.00 மணியளவில் இடியுடன் கூடிய கோடை மழை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்தது. தொடர்ந்து பிற்பகலிலும் சில இடங்களில் மழை பெய்தது. நேற்று அதிகாலை பரவலாக பெய்த மழையால் மாநகரில் வண்ணாரப்பேட்டை, சந்திப்பு, ஸ்ரீபுரம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலையில் தேங்கி இருந்ததை காணமுடிந்தது. இந்த மழையினால் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை மணி நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 25-மில்லி மீட்டர், பாளையங்கோட்டையில் 5-மில்லி மீட்டர், திருநெல்வேலியில் 15-மில்லி மீட்டர், களக்காட்டில் 2.2-மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 5-மில்லி மீட்டர், நான்குனேரியில் 4-மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.