கொரோனா என்னும் நோய் தொற்று தற்போது பரவலாக பெருகி வரும் நிலையில் மக்கள் அனைவரும் பாரம்பரிய உணவு முறைகளுக்கு மாறி வருகின்றனர். கொரோனா என்னும் நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு மருத்துவர்களும் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இதனால் மக்களிடையே தற்போது பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகள் மீதுள்ள ஆர்வம் குறைந்து., பாரம்பரிய உணவு வகைகள் மீது விருப்பம் அதிகரித்து வருவதை காண முடிகிறது. குறிப்பாக பனங்கற்கண்டு சுக்கு பால், கருப்பட்டி காபி, உளுந்தங்கஞ்சி, பருத்தி பால், நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு, பதநீர், இளநீர், நுங்கு, உளுந்தங்களி, வெந்தய களி, சுக்கு களி, அவித்த பயறு வகைகள், இஞ்சி சாறு போன்ற பாரம்பரிய உணவு வகைகள் உடம்பிற்கு தேவையான சத்துக்களை வழங்கும் என்பதால் அதனை உண்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மண் பானைகள் மற்றும் மண் பாத்திரங்கள் கொண்டு சமையல் செய்து, ஆரோக்கியமான பாரம்பரிய உணவு வகைகளை உண்ணுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.