திருநெல்வேலி மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதும் நிரம்பி வழிகிறது. தினமும் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கையும், சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் கூடுதலாக மாநகர் பகுதியில் மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபம், பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களிலும், மாவட்டத்தில் கூடங்குளம், பத்தமடை ஆசிரமம் ஆகிய இடங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெருகி வரும் நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கூடுதலாக தருவையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் வளாகத்தில் 150 படுக்கைகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு அவர்கள் நேரில் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். இங்கு நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.