கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது அக்னி நட்சத்திர காலமும் ஆரம்பித்து விட்டதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனைச் சமாளிக்க முடியாமல் மக்கள் அனைவரும் திணறி வரும் நிலையில், நேற்று மாநகரின் முக்கிய இடங்களில் பகல் மற்றும் மாலை வேளையில் பரவலாக கோடை மழை பெய்தது. திடீரென்று பெய்த இந்தக் கோடை மழையால் வெயிலின் தாக்கம் சற்று தணிந்தது. மாநகரில் திருநெல்வேலி டவுன், சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பகலில் கோடை மழை பெய்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி ஆகிய இடங்களில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்தக் கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.