திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பரவி வரும் நோய்த்தொற்றினால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வரும் வகையில், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக சிகிச்சை மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இந்த பரிசோதனையின் மூலம் நோய்த்தொற்றை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால், மேலும் இந்தத் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே மக்கள் அனைவரும் வீடு தேடி வந்து பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதன்படி நேற்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம், ராதாபுரம், நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் அரசு சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், ஊராட்சி துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சிறு குழுக்களாக பிரிந்து வீடு வீடாகச் சென்று மக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறிவதற்கான பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் மக்களிடையே முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.