கொரோனா நோய் தொற்று தற்போது பரவலாகப் பெருகி வரும் சூழ்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று காரணமாகப் பலர் சிகிச்சை பெற மருத்துவமனையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தமிழக அரசு நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் திருக்கோவில்கள் நிர்வாகம் சார்பாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நேற்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் சார்பாக நேற்று திருக்கோவில் அன்னதான மண்டபத்தில் வைத்து சாம்பார் சாதம் தயாரிக்கப்பட்டு, உணவு பொட்டலங்களாகக் கட்டப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உறவினர்களுக்கும் இந்த உணவு பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்தார்கள்.