திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 4820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் நிரப்பப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 900 மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இங்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய ஐந்து மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் அதிகரித்து வருகிறது.
இதனால் தஞ்சாவூர், திருச்சி, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.