கொரோனா நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் சித்த மருந்துகள் அடங்கிய தொகுப்பின் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு இணைந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், தாளிசாதி மாத்திரை, திரிபலாதி மாத்திரை , அஸ்வகந்தா மாத்திரை மற்றும் ஆர்சனிக் ஆல்பம் போன்ற 6 வகையான மூலிகைப் பொருட்கள் அடங்கியுள்ள தொகுப்பினை நூறு ரூபாய்க்கு மக்கள் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சித்த மருந்துகள் தொகுப்பு திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், நெல்லை ஆகிய நான்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன் அவர்கள் நேற்று இந்தச் சித்த மருந்துகள் தொகுப்பினை அறிமுகம் செய்து விற்பனையை துவங்கி வைத்தார். பொது மக்கள் இந்த சித்த மருந்துகள் தொகுப்பை 9003777757, 8760777757, 9865255545 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.