கொரோனா நோய் தற்போது தீவிரமாக பரவி வரும் நிலையில், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் என்னும் மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. வெளிச்சந்தையில் இந்த மருந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசு மருத்துவமனைகள் மூலம் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஹைகிரவுண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த மருந்து விற்பனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்த மருந்து தேவைப்படும் நிலையில், தேவையான ஆதாரங்களை காட்டி அவர்கள் உறவினர்கள் இந்த மருந்தை வாங்கி செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்ட மக்களும் தங்களுக்கு தேவையான மருந்தினை வாங்க திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர்.