திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்கு நாள் பெருகி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வழியும் நிலையில், மாநகரில் உள்ள மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபம், காந்திமதி மேல்நிலைப்பள்ளி வளாகம், பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மேலும் நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக மேலும் சில கொரோனா சிகிச்சை மையங்களைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் மக்கள் பயன்பாடின்றி நல்ல நிலையில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான கட்டிடங்களைக் கையகப்படுத்தி தற்காலிக கொரோனா சிகிச்சை முகாம்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் முதற்கட்டமாகத் தற்போது பாளையங்கோட்டை அகில இந்திய வானொலி நிலையம் அருகில் உள்ள டிஸ்ட்ரிக்ட் கிளப் கட்டிடம் தற்காலிகமாகக் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இந்த டிஸ்ட்ரிக்ட் கிளப் கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் பல்வேறு சர்ச்சைகளால் மாநகராட்சியால் மூடிச் சீல் வைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த இந்தக் கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி தற்போது தற்காலிக கொரோனா சிகிச்சை மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பு மையமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல அடுத்ததாகப் பாளையங்கோட்டையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் கட்டிடமும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.