தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துவரும் நிலையில், மாநிலம் முழுவதும் 07/06/2021 தேதி வரை முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாகனங்கள் மூலம் வீதி வீதியாக கொண்டு சென்று விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நேற்று முதல் அனுமதி வழங்கினார்கள்.
இதன்படி ஒவ்வொரு வார்டிற்கும் இரண்டு வாகனங்கள் என 55 வார்டுகளுக்கும் 110 வாகனங்களில் மளிகை பொருட்கள் விற்பனை நேற்று காலை முதல் தொடங்கியது. இந்த மளிகை பொருட்கள் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாகனங்களில் வீதி வீதியாக சென்று விற்பனை செய்யப்படும் எனவும் இதனை திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பலசரக்குகள், பழங்கள் ஆகியவற்றை மாநகராட்சி அனுமதி பெற்றுள்ள கடைகள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.