திருநெல்வேலி மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 01/06/2021 ஆம் தேதி முதல், கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடி, தடுப்பணைகள் மூலமாக திறக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் வழியாக சென்று விவசாய நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது.
இதனால் தற்போது தாமிரபரணியில் உள்ள தடுப்பணை வழியாக ஒவ்வொரு கால்வாயிலும் வரிசையாக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று தாமிரபரணியில் உள்ள சுத்தமல்லி தடுப்பணையில் இருந்து, திருநெல்வேலிக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.சுமார் 130 நாட்களுக்கு திறந்து விடப்படும் இந்த தண்ணீர் மூலம் 4,168 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.