தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலாக பரவி வந்த நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், ரயில்கள் மட்டுமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் இயங்கி வந்தது. இதனால் ரயில்வே துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தெற்கு ரயில்வே அறிவுறுத்தியிருந்தது. இதற்காக தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் மாநகர நல அலுவலர் மருத்துவர் திருமதி.சரோஜா அவர்கள் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் திரு.வரதராஜன் மட்டும் நெல்லை ரயில் நிலைய மேலாளர் திரு.முருகேசன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இந்த முகாமில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை, வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிஜென் அளவு பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு கோவிட் தடுப்பூசிகளும் போடப்பட்டன. இத்தகைய சிறப்பு முகாம்கள் மூலம் மதுரை ரயில்வே கோட்டத்தில் இதுவரை 4494 பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.