கொளுத்தும் கோடை வெயிலுக்கு இடையில் நேற்று நெல்லை மாநகர் பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்தது. அக்கினி நட்சத்திர காலம் முடிவடைந்த பின்னரும் நெல்லை மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் சதமடித்து வரும் நிலையில், நேற்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
நெல்லை மாநகரில் சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, முருகன்குறிச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு மேல் பெய்த திடீர் மழையால், மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊரடங்கு தளர்த்தபட்ட நிலையில் மாலை 5.00 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால், பொருட்கள் வாங்க வெளியே வந்திருந்த பொது மக்கள் இந்த திடீர் மழையினால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அருகில் இருந்த கடைகளுக்கு உள்ளும், முன்னும் ஒதுங்கி நின்றனர். இந்த திடீர் மழையினால் வண்ணாரப்பேட்டை - முருகன்குறிச்சி சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பு பணி காரணமாக தோண்டப்பட்ட குழிகள் முழுவதும் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியது.