கோடை காலத்தில் இயற்கை தரும் வரப்பிரசாதமாக நமக்கு பனை மரங்கள் மூலம் கிடைக்கக்கூடியது பதநீர் மற்றும் நுங்கு. இந்த பனை பொருட்கள் கோடை கால வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்து நமக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன. நெல்லை மாவட்டத்தில் பனைமரங்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் இங்கு பொதுவாக கோடை கால துவக்கத்தில் இருந்தே பதநீர் மற்றும் நுங்கு விற்பனை களைகட்டத் துவங்கும். இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நுங்கு விற்பனை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக கடைகள் திறக்கப்பட்டதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலையோரம் நுங்கு விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இதனால் பனை தொழிலாளர்களும் உற்சாகமாக நுங்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.