திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஆக்சிஜன் அளவும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஆகியவற்றில் இருந்தும், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் இருந்தும் கூடுதல் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.
எனினும் நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒடிசாவில் இருந்து சுமார் 12 டன் ஆக்சிஜன் டேங்கர் லாரியில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனை சேமிப்பு டேங்கில் நிரப்பப்பட்டது. இந்த ஆக்சிஜனை கொண்டு அடுத்த மூன்று நாட்களின் தேவையை சமாளித்து கொள்ளலாம் என்றும், மேற்கொண்டு தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய மருத்துவமனை நிர்வாகம் சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.