திருநெல்வேலி மாநகரத்தில் கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக தற்போது நோய் தொற்று குறைந்து வருவது சற்று ஆறுதலாக உள்ளது. நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வார்டுகளிலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் சுமார் 50,000 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநகரில் ஆங்காங்கே தினமும் 20,000 முதல் 25,000 நபர்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
மாநகரில் பல இடங்களில் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே நேரில் சென்று களப்பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால், மாநகர் பகுதிகளில் தற்போது கொரோனா நோய் பரவல் குறைந்து வருகிறது. எனினும் கொரோனா நோய்த்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் வரை, பொது மக்கள் அனைவரும் ஊரடங்கு நடவடிக்கைகளை பின்பற்றி மாநகர நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.