தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெருகிக் கொண்டிருக்கும் இந்த நோய் தொற்றை தடுக்கவும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம், மாநில அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்பகங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குழந்தைகளை பராமரிப்பதோடு, கொரோனா நோய்த்தொற்றால் தனது பெற்றோர்களை இழந்து ஆதரவில்லாமல் தவிக்கும் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உணவு, உடை மற்றும் கல்வி ஆகியன வழங்கப்படுகிறது.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் சுமார் 79 காப்பகங்கள் மூலம் இந்த மகத்தான சேவைகள் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது பற்றிய விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள 24 மணி நேரமும் செயல்படும் 1098 என்ற இலவச (டோல் ஃப்ரீ) எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் பொதுமக்கள் ஆதரவில்லாமல் தவிக்கும் குழந்தைகள் பற்றிய தகவல்களை 0462 - 2551953, 9944746791 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடனடியாக காப்பகங்களில் இருந்து பணியாளர்கள் வந்து அந்த குழந்தைகளை தங்கள் பொறுப்பில் காப்பகங்களுக்கு அழைத்து செல்வார்கள்.