கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. எனினும் இந்த குறைந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்களை வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் உள்ள சில வியாபாரிகள் லோடு ஆட்டோக்களை நடமாடும் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளாக மாற்றியுள்ளனர். இதற்காக லோடு ஆட்டோக்களில் தேவையான மாற்றங்கள் செய்து பொருட்களை அழகாக அடுக்கி வைத்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.